தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு!
தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 6 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் தூய்மைப் பணியாளர்களின் உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடியிருப்பு போன்ற பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியின்போது ரசாயனங்கள், தூசு மற்றும் கழிவுகளால் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கான மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, தொழில் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சைக்கு தனித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பணியின்போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, உடனடி நிதி உதவியாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்கு உதவும் வகையில் அமைத்துள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியிலிருந்து மாறி, சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதற்காக ரூ.3.5 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், இந்தக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியம் அளிக்கப்படும். இந்தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தூய்மைப் பணியாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும்.
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படித்தாலும், அவர்களுக்கு உயர் கல்விக்கான கட்டணச் சலுகைகள் மட்டுமல்லாமல், விடுதிக் கட்டணம் மற்றும் புத்தகங்களுக்கான செலவுகளையும் உள்ளடக்கிய 'புதிய உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்' செயல்படுத்தப்படும். இது அவர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, அடுத்த 3 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் 30,000 குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அவர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இலவசமாக காலை உணவு வழங்கப்படும்.
இந்தத் திட்டங்கள், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுத் தரும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.