For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”லிவ்-இன் உறவை பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை; ரூ.25,000 அபராதம்” - உத்தரகாண்ட் அரசு!

02:03 PM Feb 07, 2024 IST | Web Editor
”லிவ் இன் உறவை பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை  ரூ 25 000 அபராதம்”   உத்தரகாண்ட் அரசு
Advertisement

லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் தங்களது உறவை தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் எனவும்,  தவறினால் அபராதமும், சிறை தண்டனையும் வழங்கப்படும் என உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உத்தரகாண்ட் சட்டசபையில்,  பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை, அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று தாக்கல் செய்தார்.  இந்த மசோதாவில் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது.  லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயமாக 18 வயதுக்கு கீழ் இருக்கக் கூடாது.  லிவ்-இன் உறவில் இருப்பவர்களில் இருவரில் ஒருவர் 21 வயதுக்கு உட்பட்டு இருப்பின்,  இது குறித்து அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு சம்பந்தப்பட்ட பாதுகாவலர் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்கள் உறவை பதிவு செய்ய தவறும்பட்சத்தில்,  பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் - 2024-இன் படி,  அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.  அல்லது இவை இரண்டும் தண்டனைகளாக வழங்கப்படும்.  மேலும், பதிவாளரிடம் அளிக்கப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பாக இருந்தால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது 3 மாதம் சிறைதண்டனையும்,  பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டால்,  ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும்,  ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டமானது உத்தரகாண்டில் இருக்கும் லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும், லிவ்-இன் உறவில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.  அதேநேரம், மாநிலத்திற்கு வெளியே இருப்பவர்களும்,  இந்த சட்டத்தின் உட்பிரிவான 381 பிரிவு (1)-இன் கீழ் தாங்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தையாக கருதப்படுவர்.  அதேபோல், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண் தனித்து விடப்பட்டால்,  தனக்கான உரிமையைக் கோரி தனது லிவ்-இன் துணை உறவிடம் இருந்து பராமரிப்புத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மசோதா கூறுகிறது.  இதற்கான நிவாரணத்தை நீதிமன்றத்தை நாடி பாதிக்கப்பட்டவர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement