Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை... மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்!

08:04 AM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement

மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. 6 மாதமான அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இருப்பினும், பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அதே கிராமத்தை சேர்ந்த ராகவீர் தடக் என்பவரின் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

Advertisement

தன்னை மாந்திரீகன் என்று கூறிக்கொண்ட ராகவீர் தடக், குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக தெரிவித்தார். இதனை நம்பிய தம்பதி, குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்றுமாறு ராகவீர் தடக்கிடம் கூறினர். இதனையடுத்து, ராகவீர் தடக் நேற்று முன் தினம் வீட்டில் செங்கல்களை அடுக்குவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ வைத்தார்.

பின்னர், ராகவீர் பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை கட்டி தொங்க விட்டார். தீயின் வெப்பத்தை தாங்க முடியாத அந்த பச்சிளம் குழந்தை அலறி துடித்தது. ஆனால் குழந்தையின் பெற்றோர்கள் அதனை தடுக்கவில்லை. இந்த முறையில் சிகிச்சை அளித்தால் தங்கள் குழந்தை விரைவில் குணமடைவான் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை, மாறாக, நெருப்பின் வெப்பத்தால் குழந்தையின் கண்கள் கடுமையாக சேதமடைந்தன.

இதனையடுத்து, குழந்தையை நேற்று சிவ்புரி மாவட்ட மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். குழந்தையின் கண் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்த மருத்துவர்கள் இது குறித்து பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது, மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன் கட்டி தொங்கவிட்டதை பெற்றோர் கூறினர். இதைக்கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவமனையில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் கண் பார்வை குறித்து 2 நாட்களுக்குப்பின்தான் தெரியவரும் என்று கூறினர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
babyDoctorfirehospitalMadhya pradeshnews7 tamilNews7 Tamil UpdatesPoliceShivpuri
Advertisement
Next Article