கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு; சென்னை காவல்துறை அதிரடி!
சென்னையில் உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து ஏராளமான பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உச்சநீதிமன்ற ஆணையின் பேரில், தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரங்கள் மட்டும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி
அளிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் உத்தரவின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், உதவி மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி முதல் இன்று (13.11.2023) காலை வரை உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 554 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும், அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் என மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.