800 ஆடுகள், 2000 கோழிகள் ஒன்றாக சமைத்து அன்னதானம்.. முத்தழகுபட்டியில் களைகட்டிய செபஸ்தியார் கோயில் திருவிழா!
திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான அன்னதானம் வழங்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.
இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் பெரும்பாலானோர் மூட்டை தூக்கும் தொழிலில்
ஈடுபடுபவர்களாகவும் கூலி வேலை செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார்
ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில்
நான்கு நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 4ம் தேதி ஆயிரக்கணக்கான
பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான கறிவிருந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
நேற்று நடைபெற்றது. இதற்காக ஊரில் உள்ள பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து புனித செபஸ்தியாருக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக கோழி,ஆடுகளை தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மொத்தம் 800 ஆடுகள் 2000 கோழிகளை பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் வெங்காயம், தக்காளி, அரிசி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், மிளகாய் பொடி
உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கினர். தொடர்ந்து ஆண்கள்,பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஊர் பொதுமக்கள் அனைவரும் பாகுபாடு இன்றி உணவு சமைக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை முதலில்
பலியிட்டு அதனை சுத்தம் செய்து பின்னர் இளைஞர்கள் அதனை சமைப்பதற்கு ஏற்றார்
போல் வெட்டி மொத்தமாக ஒரு பாத்திரத்தில் பிரித்து வைத்தனர். மேலும், பெண்கள் வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை நறுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரிக்கை!
இப்படி ஊரை ஒன்று கூடி அன்னதானத்திற்காக உழைத்து உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக அடுப்புகளில் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட பல்லாயிரம் கிலோ அரிசி சாதம் மற்றும் இறைச்சி மற்றும் காய்கறிகளைக் கொண்டு உணவு தயார் செய்யப்பட்டது. நேற்று காலை முதல் 1 லட்சம் பேருக்கு உணவு தயார் செய்யும் பணி நடைபெற்ற நிலையில் இரவு 7 மணி அளவில் கோயில் அருகே அமைந்துள்ள திடலில் மாபெரும் கறிவிருந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுட்டது.