உ.பி.யில் 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம்!
உத்தரபிரதேசத்தில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் எழுதிய காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநில காவல் துறையில், போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான ஆட்சேர்ப்பு எழுத்துத்தேர்வு கடந்த பிப்.17 மற்றும் 18-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்சேர்ப்பு பணிக்கான எழுத்துத்தேர்வு 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தேர்வெழுத வந்த நபர் ஒருவரின் அனுமதிச் சீட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரும், புகைப்படமும் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவல்துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநில அரசு திடுக்கிடும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு முன்னர் வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தான் காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த உத்தர பிரதேசம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மறுதேர்வு அடுத்த 6 மாதத்திற்குள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.@Uppolice आरक्षी नागरिक पुलिस के पदों पर चयन के लिए आयोजित परीक्षा-2023 को निरस्त करने तथा आगामी 06 माह के भीतर ही पुन: परीक्षा कराने के आदेश दिए हैं।
परीक्षाओं की शुचिता से कोई समझौता नहीं किया जा सकता।
युवाओं की मेहनत के साथ खिलवाड़ करने वाले किसी भी दशा में बख्शे नहीं…
— Yogi Adityanath (@myogiadityanath) February 24, 2024
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “உ.பி. ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு-2023ஐ ரத்து செய்து, அடுத்த 06 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத்தன்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் விடமாட்டார்கள். இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.