5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: 5-ல் 1 வேட்பாளர் குற்றப் பின்னணி கொண்டவர் - அதிர்ச்சி ரிப்போர்ட்!
5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ள 5ல் ஒரு வேட்பாளருக்கு குற்றப் பின்னணி உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தெலங்கானாவில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் டிச.3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :
- ராஜஸ்தான் 75.45%
- சத்தீஸ்கர் 67.34%
- மத்திய பிரதேசம் 71.11%
- மிசோரம் 78%
இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்த மற்றும் நடைபெற உள்ள மாநிலங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநில தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 8,054 வேட்பாளர்களில் 18% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ADR மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக 12% பேர் மோசமான கிரிமினல் வழக்குகளை கொண்டவர்கள் எனவும் , 29% வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹3.36 கோடிக்கு மேல் உள்ளது என்றும் ADR அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADR மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 5மாநிலங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 5இல் 1 நபர் கிரிமினல் வழக்கு உடையோர் என்பது குறிப்பிடத்தக்கது.