குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக அயலக வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதனிடையே குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், தஞ்சையைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.