சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!
விருதுநகரில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் ஜனகன். இவருக்கு
சொந்தமான ஐஸ் கோன் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கம்பெனியின் விரிவாக்க பணிக்காக கட்டிடத்தில் மேல் தளம் கட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.
இந்த பணிக்காக சாத்தூர் அருகே புதுபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் தலைமையில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் காங்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காங்கிரீட் போடும் பணியின் போது திடீரென இரும்பு கம்பி சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் கான்கிரீட் போடும் மேல் தளத்தில் பணியாற்றிய பாண்டி, சங்கர், கதிரேசன் மற்றும் ஜெய்சங்கர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
இதையும் படியுங்கள்; இந்தியன் 3’ படப்பிடிப்பு எப்போது? - லேட்டஸ்ட் அப்டேட்!
பின்னர், விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற
சாத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் காயம்
அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கான்கிரீட் போடும் பணியின் போது விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியது.