5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!
வயநாடு நிலச்சரிவில் குகையில் சிக்கிய 4 பழங்குடியின குழந்தைகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு பத்திரமாக மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிகளால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 5-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, வனத்துறையினர், தன்னார்வலர்கள் என பலரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலச்சரிவால் மலை உச்சியில் இருந்த குகைக்குள் சிக்கித் தவித்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை கேரள வனத்துறை அதிகாரிகள் துணிச்சலான மீட்ட சம்பவம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
பழங்குடி குழந்தைகளை மீட்ட வனத்துறையினர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “குழந்தைகள் சோர்வாக இருந்தனர், முதலில் நாங்கள் எடுத்துச் சென்றதை அவர்களுக்கு கொடுத்து உணவளித்தோம். பின்னர், நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அவர்களின் தந்தை எங்களுடன் வர ஒப்புக்கொண்டார், நாங்கள் குழந்தைகளை எங்கள் உடலில் கட்டிக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றோம்” என தெரிவித்தனர்.