கேரளாவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் பலி!
கேரளாவில் அதிகளவில் பரோட்டா சாப்பிட்ட 5 மாடுகள் உயிரிழந்தன.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே வட்டப்பாரா என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஹசபுல்லா. இவர் மாட்டுப்பண்ணை நடத்தி வருவதுடன், பால் விநியோகமும் செய்து வருகிறார். வழக்கமாக மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் தீவணங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் வழக்கத்திற்கு மாறாக ஓட்டல்களில் மிஞ்சிய பரோட்டாவை வாங்கி மாடுகளுக்கு உணவாக வழங்கியுள்ளார்.
இதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மாடுகள் மயங்கி விழுந்தன. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஹசபுல்லா, மாடுகளை சோதனை செய்ததில் அவை உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹசபுல்லா கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவரது வீட்டிற்கு வந்த மருத்துவ மையத்தின் அவசர மீட்புக்குழுவினர் உயிரிழந்த மாடுகளை பரிசோதித்தனர்.
அதிகளவில் பரோட்டா மற்றும் பலாப்பழம் சாப்பிட்டதால் ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 5 மாடுகளும் உயிரிழந்ததாக கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 9 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கால்நடை மருத்துவ குழுவினர், மாடுகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை கொடுக்க கூடாது என்றும், குறிப்பாக பரோட்டா, சோறு, பலாப்பழம் ஆகியவற்றை அதிகளவில் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.
மேலும், கேரள கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சராணி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, இறந்த மாடுகளுக்கு நிவாரணம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.