#Paralympics2024ல் 4வது பதக்கம் - தங்கம், வெள்ளி, 2வெண்கல பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!
பாராலிம்பிக் போட்டியில் தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. இந்த பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோல துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 100 மீட்டர் தடகளப் போட்டியில் 14.12 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பிரீத்தி பால் வெண்கலம் வென்றார். இதேபோல துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனிஷ் நர்வால் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.இதன் மூலம் இந்திய அணி 4 பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.