பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 4-ஆவது வெண்கலம்! ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஆடவர் அணி!
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் போராடி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, இன்று (08.08.2024) நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினை இந்திய அணி எதிர்கொண்டது. முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரு தரப்புக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு முதல் பாதியின் 2 நிமிடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர்கள் கோலாக மாற்றத் தவறினர்.
18-வது நிமிடத்தில் தனது கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரல்லஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இரண்டாவது கால் பகுதி முடியும்போது, 30-ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீதீ சிங் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமனநிலையில் இருந்தன.
33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் மற்றொரு கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை முன்னிலை பெற வைத்தார். இதையடுத்து ஸ்பெயின் அணி வீரர்கள் கோல் அடிக்க போராடினார். அதனை இந்திய வீரர்கள் சாமர்த்தியமாக தடுக்க இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
முன்னதாக, இந்திய வீராங்கனை மனு பாகர், துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் அவர் வெண்கலம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றார். தற்போது இந்திய ஹாக்கி அணி 4வது வெண்கலப் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.