சட்டவிரோத டிக்கெட் முன்பதிவினால் 4,975 பேர் கைது - தெற்கு ரெயில்வே தகவல் !
கடந்த ஆண்டு தட்கல் மற்றும் முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து 26,442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
"இந்தியா முழுவதும் ரயில்வேயில் போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வேயின் வணிக பிரிவு அதிகாரிகள், ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவை இணைந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், டிக்கெட் கவுன்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஒரே நேரத்தில் பெருவாரியான டிக்கெட்டுகளை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதன்படி, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ரூ.53 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர, தட்கல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முன்பதிவு முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து 26 ஆயிரத்து 442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.