“45 நாட்கள் தூங்கல”...ஒழுங்கா சாப்டல” - #WorkPressure-ஆல் உயிரை மாய்த்துக்கொண்ட தனியார் ஊழியர்!
உத்தரப்பிரதேசத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், பணி அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தருண் சக்சேனா. 42 வயதான இவர் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதிக பணி அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் தனது உயிரை மாய்த்துகொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மற்றொரு அறையில் அடைத்து வைத்துள்ளார்.
தருண் சக்சேனா கடந்த இரண்டு மாதங்களாக கடினமான இலக்குகளை அடையுமாறு நிறுவனம் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சம்பளம் பிடித்தம் செய்வதாக மிரட்டியதாகவும் அடிக்கடி கூறியுள்ளார். தற்கொலை கடிதத்தில், தன்னால் முடிந்தவரை முயன்றும் இலக்குகளை அடைய முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இதனால், தனது வேலையை இழக்க நேரிடும் என்று கவலை அடைந்ததாகவும், மூத்த அதிகாரிகள் தன்னை பலமுறை அவமானப்படுத்தியதாகவும் அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
மேலும் எதிர்காலத்தை நினைத்து பதட்டமாக இருப்பதாகவும், சிந்திக்கும் திறனை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். நான் போகிறேன்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 26 வயதான பட்டய கணக்காளர் (Chartered Accountant) அன்னா செபாஸ்டியன் அதீத வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்தது.இதன் தொடர்ச்சியாக தற்போது உத்தரப்பிரதேச தனியார் நிறுவன ஊழியர் வேலைப்பளு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.