‘தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7,299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்’ - போக்குவரத்துத் துறை!
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் 102 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
‘சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மற்றும் இதர நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள். தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழ் நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பாக, வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு முன் ஏற்பாடுகளை செய்ய, எனது தலைமையில் கடந்த ஏப். 8 ஆம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்துக் கழகங்கள், காவல் துறை, போக்குவரத்து ஆணையகம், சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தாம்பரம் மாநகராட்சி, தேசிய சாலை மேம்பாட்டு ஆணையகம் (NHAI) உள்ளிட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஏப். 17 மற்றும் ஏப். 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 2970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தமாக 7154 பேருந்துகள் இயக்கப்பட்டன.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம், புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்(CMBT), கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம்(MMBT), தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம் (MEPZ), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப இயக்க திட்டமிடப்பட்டு, பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையங்களிலிருந்து பயணம் மேற்கொள்ளுமாறு ஏப். 8 முதல் தொடர்ந்து செய்திகள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் Twitter உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் வெளியிடப்பட்டது.
சென்னையிலிருந்து பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக ஏப். 17 மற்றும் ஏப். 18 ஆகிய தேதிகளில் 68,822 இருக்கைகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டது. அதன் முன்பதிவு நிலை, நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி தெரிவிக்கப்பட்டு தங்கள் பயணத்தை முன்பாக திட்டமிட்டு பயணிக்க பலமுறை அறிவுறுத்தப்பட்டது . அதன் அடிப்படையில், ஏப். 17 அன்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும், பயணிகளின் தேவைகேற்ப 807 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,48,800 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும், 2,308 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 4,400 பேருந்துகளில் 2,55,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஏப். 17 மற்றும் ஏப். 18 ஆகிய இரண்டு நாட்களில் 7,299 பேருந்துகளில் சுமார் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு தினங்களில் சென்னையிலிருந்து 31,532 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த 2021ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய நாள் சென்னையில் இருந்து மொத்தமாக இயக்கப்பட்ட 3,353 பேருந்துகளில் பயணித்த 1,36,963 பயணிகளை விட கூடுதலாக 1,18,037 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும், கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக இயக்கிய பேருந்துகள் மற்றும் பயணம் செய்த பயணிகளை விட தற்போது கூடுதலாக பயணித்துள்ளனர். மேலும், பயணிகளின் வசதிக்காக, தென்னக இரயில்வே தமிழ்நாடு அரசின் வேண்டுகோள்படி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூருக்கும், கூடுதல் ரயில்கள் மற்றும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று இயக்கப்பட்டது.
மேற்கண்ட பேருந்து இயக்கங்களை திட்டமிடப்பட்டபடி இயக்க, போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் , பொது மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பேருந்து நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக 24X7 என்ற அளவில் முகாமிட்டு, இன்று அதிகாலை 5 மணிக்குள் அனைத்து பயணிகளையும் பேருந்துகளில் தாங்கள் சேருமிடத்திற்கு அனுப்பபட்டுள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்று வாக்களித்திட தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.