5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!
கடந்த 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி என உலகில் உள்ள பல நாடுகளில் இந்திய மாணவர்கள் பலரும் மேற்படிப்பை படித்து வருகின்றனர். இதனால், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் இறப்பு எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்து வடிவில் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாவது;
கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை காரணங்கள், விபத்துகள், உடல் உபாதைகள் என வெளிநாடுகளில் பயிலும் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 34 நாடுகளில் இந்திய மாணவர்கள் பயின்று வரும் நிலையில், கனடாவில் தான் அதிக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கனடாவில் கடந்த 5 ஆண்டுகளில் 91 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு பிறகு, இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தில் 48 பேரும், ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னைகளுக்கும் வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்னுரிமை அடிப்படையில் பதிலளித்து வருகின்றன. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா உறுதியாக உள்ளது" என்றார்.