“அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழில் 40% மதிப்பெண்கள் அவசியம்” – அரசாணையை மீண்டும் உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!
அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழித் தாளில் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை மீண்டும் உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் குருப் – 1, 2A, 3, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில், 2021ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசுப் பணிகளுக்கு நடைபெறும் தோ்வில், தமிழ் மொழித் தாளில் 40% மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழ் மொழித்தாள் தோ்வில் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என 2021 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.
இதனையடுத்து, இந்த அறிவிப்பாணையை எதிா்த்தும், தமிழ் மொழித் தாள் தோ்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தோ்வுத் தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிா்த்தும் நிதேஷ் உட்பட10 விண்ணப்பதாரா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆா். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் வழியில் படித்தவா்களுக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதைப் போலாகி விடும்" என மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், "அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டாா்.
பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது" என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அமா்வு தள்ளுபடி செய்தது.