குற்றவியல் சட்டங்கள் குறித்து 40 லட்சம் தன்னார்வலர்கள், 5 லட்சம் காவலர்களுக்கு பயிற்சி!
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இச் சட்டங்கள் குறித்து 5.65 லட்சம் காவலர்கள், 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலும் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த சட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த சட்டங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் இந்த சட்டங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து 40 லட்சம் கடைநிலை ஊழியர்கள், 5.65 லட்சம் போலீசார் மற்றும் சிறைத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது;
புதிய குற்றவியல் சட்டங்கள், விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய குற்ற ஆவண காப்பகம், குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்புகளில் 23 செயல்பாட்டு மாற்றங்களை செய்துள்ளது. புதிய நடைமுறைக்கு மாறுவதற்காக,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்குகிறது.
சட்டங்கள் மூலம் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் பற்றி அறிந்திருப்பதை உறுதி செய்யும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகங்களின் மூலம் இணைய வழி கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதில்,கடை நிலை ஊழியர்கள் 40 லட்சம் பேர் பங்கேற்றனர்.
சட்ட விவகாரங்கள் துறை, மாநிலங்களின் தலைநகரங்களில் 4 மாநாடுகளை நடத்தியது. இதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள்,தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.