காஷ்மீரில் 3 நாட்களில் 4-வது தாக்குதல் - பயங்கரவாதிகளின் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் காயம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த 3 நாட்களில் 4 முறை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி இரவு, ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலினால் பேருந்து பள்ளத்தில் விழுந்து 9 பேர் பலியாகினர். மேலும் 41 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, கடந்த 11ம் தேதி நள்ளிரவு கதுவா மாவட்டத்தில் குடியிருப்பின் மீதும், தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 வீரர்கள் காயமடைந்ததனர்.
இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தோடா மாவட்டம் காண்டோ பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே நேற்று இரவு 8.20 மணியளவில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிறப்புக் காவலர் ஃபரித் அகமது என்பவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிற 4 பயங்கரவாதிகளின் உருவப் படங்களை ஜம்மு காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த 4 பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.