நவி மும்பை | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - இருவரை மீட்கும் பணி தீவிரம்!
நவி மும்பையில் இன்று அதிகாலை நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 20 ம் தேதி, மும்பையின் கிராண்ட் சாலை அருகே உள்ள ரூபினா மான்சில் என்ற கட்டிடத்தின் பால்கனியின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை உட்பட பல நகரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவின் நவி மும்பையில் சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 13 குழந்தைகள் உட்பட 52 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.
மேலும் 5 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பது தெரியவந்தது. அவர்களில் இருவர் மீட்கப்பட்டனர். மற்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. மற்ற இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இடிந்த கட்டிடம் 10 ஆண்டுகள் மட்டுமே பழமையானதாக கூறப்படுகிறது. இது குறித்து நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே கூறுகையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்குத் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என கூறினார்.