வெளிமாநில சொகுசு கார்களை திருடி வண்ணம் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை மாற்றி விற்பனை - கோவையில் 4பேர் கைது!
கோவையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் கார்களை குறி வைத்து திருடி அவற்றின் வண்ணம் மற்றும் ஜிபிஎஸ் கருவியை மாற்றி விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த முகமது அக்தன் என்பவர் கடந்த மார்ச் 21ம்
தேதி கோவை குற்றாலத்துக்கு தனது தார் காரில் சென்றார். அதேபோன்று
திருச்சூரைச் சேர்ந்த நவாஸ் என்பவரும் அவரது சகோதரரும் பலினோ மற்றும் ப்ரீஸ்டா
ஆகிய இரு கார்களில் தனித்தனியாக கோவை குற்றாலத்துக்கு சென்றனர். கோவை
குற்றாலத்தில் குளித்த மூவரும் செல்வபுரம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு அருகில்
தங்களது கார்களை நிறுத்திவிட்டு, தொழுகைக்கு பள்ளிவாசலுக்குள் சென்றனர்.
தொழுகை முடிந்து திரும்பி வந்த மூவரும் தங்கள் கார்கள் மாயமானதை கண்டு
அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கரும்பு கடை பகுதியை சேர்ந்த அசாருதீன், முகமது யூசுப், யாசிர் மற்றும் துடியலூரைச் சேர்ந்த ஜான் பீட்டர் ஆகியோர் கார்களை திருடியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் கார்களை பெரும்பாலும் குறி வைக்கும் இந்த கும்பல், கார்களின் வண்ணத்தையும், அவற்றின் பதிவு எண்ணையும் மாற்றுவதுடன், அவற்றின் ஜிபிஎஸ்-ஐ அகற்றி புதிய ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கார்களை விற்பனை செய்து வந்தனர்.
இதனையடுத்து நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கார் கொள்ளையில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.