இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!
எல்லைத் தாண்டி வந்து, நாகை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மியான்மர் மீனவர்கள் நான்கு பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
நாகை கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், நேற்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்றுள்ளது. உடனே அங்கு விரைந்து சென்ற கடற்படை காவல் படையினர் பாய்மர கப்பலை சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து கப்பலில் இருந்த 4 மீனவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் அவர்கள் மியான்மர் நாட்டை சேர்ந்த விம்சோ, ஹான் சோ, கிய் லூரின், லங்சன் ஏஜ் என்பதும், எல்லை தாண்டி இந்திய எல்லையில் மீன் பிடித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மீனவர்களின் படகை பறிமுதல் செய்த கடலோர காவல்படை போலீசார், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்போடு 4 பேரையும் கைது செய்து நாகை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து நான்கு பேர் மீதும் ‘இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள்’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.