ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள் | சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? வெளியான தகவல்!
ஆந்திராவில், வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
ஆந்திராவில், 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரா முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே வாகன சோதனை நடத்திய போது, அவ்வழியாக 4 கண்டெய்னர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துள்ளன.
அவற்றில், ஒரு கண்டெய்னரை சோதனை செய்தபோது, அதில் 500 கோடி ரூபாய் பணம் இருப்பதும், 4 கண்டெய்னர்களிலும் 2 ஆயிரம் கோடி எடுத்து செல்லப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்டு, பணம் முழுவதும் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, ஹைதராபாத் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்தனர்.