பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் பலர் கல்லூரியின் முதல் தினத்தை கொண்டாடும் விதமாக அரட்டை அடித்துக் கொண்டு கையில் பட்டா கத்தியுடன் செல்ஃபி எடுத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த புது வண்ணாரப் பேட்டை காவலர்கள், நான்கு பேரை மடக்கி பிடித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மற்ற மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனையடுத்து இவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் எனவும், தாம்பரம் அண்ணாநகர் பகுதி பாலாஜி (18), பொன்னேரி இசக்கியால் எட்வின் பால் (18), பொன்னேரி சுரேஷ் பாபு (18), கவரப்பேட்டையை சேர்ந்த குணசேகரன்( 19) என்பதும் தெரியவந்துள்ளது. யாரிடம் இருந்து பட்டாக் கத்தியை வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு, தங்கள் கல்லூரியைச் சேர்ந்த திலீப், புவீன், மற்றும் ரவி, ஆகிய மூவரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கத்தியை பயன்படுத்தியது மற்றும் பொது
இடத்தில் கொச்சையாக பேசியது, காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட
குற்றங்களின் கீழ் அந்த நான்கு மாணவர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிய ஓடிய கல்லூரி மாணவர்களை வண்ணாரப் பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.