3 நாட்களாக உணவின்றி தவித்த 4 குழந்தைகள்... பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வயநாடு அருகே வெள்ளரமலை சூச்சிப் பறை நீர் வீழ்ச்சி அருகே 3 நாட்களுக்கு மேல் உணவின்றி தவித்து வந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், அட்டமலா அருகே வனப்பகுதியில் சிக்கியிருந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை கேரள வனத்துறையினர் மீட்டுள்ளனர். கனமழையினால் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அவர்களின் 4 குழந்தைகளோடு மலைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்த தகவலறிந்த வனத்துறையினர் அவர்களை துணிச்சலாக சென்று மீட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய வனக்குழு அதிகாரி ஆஷிக்,
"எங்கள் குழு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் போராடி, கயிறுகளை பயன்படுத்தி மலையில் சிக்கி தவித்த குடும்பங்களை காப்பாற்றினர். செங்குத்தான மற்றும் வழுக்கும் மலைகள் வழியாக குழந்தைகளை நாங்கள் கவனமாக, பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. மீட்பு பணியின் போது பலத்த மழையுடன் வானிலை மிகவும் மோசமாக இருந்தது. நிலச்சரிவால் இவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களாக அவர்கள் உணவின்றி தவித்துள்ளனர்.
நாங்கள் குழந்தைகளை பார்த்ததும், அவர்களுக்கு பிஸ்கெட் மற்றும் ரொட்டிகளை கொடுத்தோம். குழந்தைகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக பெட்ஷீட் துண்டுகளால் அவர்களை போர்த்தி அழைத்து வந்தோம்” என தெரிவித்தார்.