தொடர்ச்சியாக 3வது முறையாக பதக்கம் பெறும் இந்திய வீரர் - சாதனை படைத்தார் #MariyappanThangavelu
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பதக்கம் பெறும் இந்திய வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையை தமிழ்நாட்டைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும். மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர். வீராங்கனைகள் மொத்தம் 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டைச சார்ந்த வீரர் இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் மூன்றாவது முறையாக பதக்கம் வெல்லும் வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2016ல் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
இதனை தொடர்ந்து டோக்கியாவில் நடைபெற்ற 2020ம் ஆண்டு பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்த நிலையில் தற்போது வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணி இதுவரை மொத்தமாக 20 பதக்கங்களை வென்றுள்ளது. அவற்றில் 10 வெண்கலம் , 7 வெள்ளி மற்றும் 3 தங்கம் என பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி மொத்தமாக 19 பதக்கங்களை வென்றிருந்த நிலையில் தற்போது வரை 20 பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது.