For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நூதன முறையில் திருடப்பட்ட 3.60 கோடி லிட்டர் தண்ணீர் - நாகை தனியார் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம்!

03:28 PM Nov 09, 2024 IST | Web Editor
நூதன முறையில் திருடப்பட்ட 3 60 கோடி லிட்டர் தண்ணீர்   நாகை தனியார் கல்லூரிக்கு ரூ 2 கோடி அபராதம்
Advertisement

ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு, அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீர் திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், கீழையூர்
தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, கொள்ளிடம்
கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, அம்மையப்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 22.50 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்படுகின்றன.

இதனிடையே கடந்த மூன்று மாத காலமாக நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், முறையாக தண்ணீர் கொண்டு வந்தும் பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு எதனால் ஏற்படுகிறது என குழம்பினர்.

இதையடுத்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் செல்லும் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நாகை, தெத்தி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து, இஜிஎஸ் பிள்ளை தனியார் கல்லூரி சாலை வழியாக, நாகை நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய்களை தோண்டி பார்த்தனர்.

இதில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் ராட்சத குழாயில் இருந்து, திருட்டுத்தனமாக ஓட்டை போட்டு, தனியார் கல்லூரி நிர்வாகம் பைப் லைன் மூலம் தண்ணீரை திருடி வந்தது அம்பலமானது. மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில், நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் என கடந்த மூன்று மாதமாக சுமார் 3, கோடியே 60 லட்சம் லிட்டர் குடிதண்ணீரை இதுவரை EGS பிள்ளை தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் உள்ளிட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையற்ற இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பல மாதங்களாக பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை நூதன முறையில் திருடி அதனை பயன்படுத்திய தனியார் கல்லூரி மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவும், 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நாகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய மூன்று கோடியே 60 லட்சம் லிட்டர் குடிநீரை மடை மாற்றி தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement