மொட்டை மாடிகளில் சூரிய மின்திட்டம் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
வீடுகளின் மொட்டை மாடிகளில் சூரிய ஒளி தகடு பொருத்தும் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நாட்டின் உட்கட்டமைப்புகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவை,
- நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வீடு அமைக்கும் இலக்கு 3 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.
- கூடுதல் மருத்துவமனைகள், கல்லூரிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கின்ற மருத்துவமனைகள், கல்லூரிகளை தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக தடுப்பூசி போடுவதை அரசாங்கம் ஊக்குவிக்கும்.
- நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். சேரி பகுதிகளிலும், முறைப்படுத்தப்படாத குடியிருப்பு பகுதிகளிலும் வசிக்கக் கூடியவர்கள், வீடு வாங்கவும், வீடு கட்டவும் வழிவகை செய்து தரப்படும்.
மேற்கூரைகளில் சூரிய ஒளி தகடு பொருத்தும் திட்டத்தின் கீழ், சுமார் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படும். உள்கட்டமைப்புக்கான செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.