நெல்லையில் ஒரே நாளில் 300 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம்... 18 லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைப்பு!
கேரளாவிற்கு நெல்லையில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 300 டன்களுக்கும் மேலான மருத்துவக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் கடந்த வாரம் திங்கள்கிழமையன்று அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன.
இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கேரள மருத்துவக் கழிவுகளை அம்மாநில அரசே அள்ளி செல்ல வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டது. அதன்பேரில் கேரளாவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழு, 6 குழுக்களாக பிரிந்து நேற்றிலிருந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளது. இதில் நேற்றைய தினம் மட்டும் சுமார் 18 லாரிகளில் மருத்துவக் கழிவுகளானது அள்ளப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே கேரளாவிற்கு அனுப்புவதற்கு முன்பாக தென்காசி மாவட்டத்தின் மாதவரம் பகுதியில் உள்ள எடைமேடை நிலையத்தில் குப்பைகள் எடைப் போடப்பட்டன. இதில் நேற்று மட்டும் 3,59,850 கிலோ மருத்துவக் கழிவுகள் அள்ளப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினமும் மருத்துவ கழிவுகளானது அள்ளப்பட்டு வருகிறது. ஒரு நாளில் மட்டும் 300 டன்களுக்கு மேலான மருத்துவக் கழிவுகள் அள்ளப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.