அண்ணா பல்கலையில் புதிதாக 30 சிசிடிவி, 40 காவலர்கள் நியமனம் - பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் நடவடிக்கை!
உயர் நீதிமன்றத்தின் கேள்விகளை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு ஒன்றையும் அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் முன்னரே 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 சிசிவிடி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.