Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டம் - மதுரை, அயோத்தி உட்ளிட்ட 30 நகரங்கள் தேர்வு!

06:55 PM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு ‘SMILE’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, 30 நகரங்களை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

யாசகம் பெறுவோர் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு 'SMILE' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக கலாச்சாரம், வரலாறு அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 30 நகரங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தேர்வு செய்துள்ளது. வடக்கில் அயோத்தி, தெற்கில் திருவனந்தபுரம், கிழக்கில் குவாஹாட்டி, மேற்கில் திரிம்பகேஷ்வர் என நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த நகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மதுரை, கோழிக்கோடு, விஜயவாடா, மைசூரு உள்ளிட்ட நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

தேர்வு செய்யப்பட்ட நகரங்களில், ‘விளிம்புநிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளித்தல்’ (ஸ்மைல்) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 2026-ம் ஆண்டுக்குள் யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக, 30 நகரங்களிலும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகள் உதவியுடன் யாசகம் பெறும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு, மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்கப்படுவதுடன் வாழ்வாதாரத்துக்கு தேவையான கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும். ஆய்வு மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்வதற்காக, யாசகம் பெறுவோர் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக தேசிய அளவிலான இணையதளம் மற்றும் செல்போன் செயலி வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான செயல் திட்டங்கள் 25 நகரங்களிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது. காங்ரா, கட்டாக், உதய்பூர் மற்றும் குஷிநகர் ஆகிய 4 நகரங்களில் இருந்து செயல் திட்டங்கள் பெற வேண்டி உள்ளது. இதுதவிர சாஞ்சி நகரில் யாசகம் பெறுவோர் யாரும் இல்லை என அந்த நகராட்சி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. எனவே, இதற்கு பதிலாக வேறு ஒரு நகரை பட்டியலில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

Tags :
AyodhyaBeggersIndiaMaduraiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaSMILESMILE ProjectTrivandrum
Advertisement
Next Article