டிக்கெட் கேன்சல் வாயிலாக ரயில்வேக்கு இவ்வளவு லாபமா? சமூக ஆர்வலர் வெளிக்கொண்டுவந்த அதிர்ச்சி தகவல்!
காத்திருப்பு பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட் ) இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் மக்களின் பணம் கிடைத்திருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்திடம் சில தகவல்களை பெற்றுள்ளார். அதில், 2021 ஆம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்த 2 கோடியே 53 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து இந்திய ரயில்வேக்கு 242 கோடியே 68 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 4 கோடியே 60 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 439 கோடியே 16 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் 5 கோடியே 26 லட்சம் டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததில் 505 கோடி ரூபாய் ரயில்வேக்கு கிடைத்திருக்கிறது.