கிராமி விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டுகள் சிறை - ஈரான் நீதிமன்றம் உத்தரவு!
ஈரானில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கிராமிய விருது வென்ற ஷெர்வின் ஹஜிபோரின் புரட்சி பாடல் உள்ளதாக கூறி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானில், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் இளம்பெண் ஹிஜாப்புக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், மஹ்சா அமினி திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், போலீசார் தாக்கியதால் தான் அமினி உயிரிழந்தாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதையும் படியுங்கள் : MLS 2024: இண்டர் மியாமி அணி 5-0 கோல் கணக்கில் வெற்றி | அடுத்தடுத்து கோல்களை பறக்கவிட்ட மெஸ்ஸி வீடியோ இணையத்தில் வைரல்!
இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஈரானையும் உலுக்கியது. இதனைக் கண்டித்து அந்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த போராட்டங்களின்போது, மொஹ்சென் ஷெகாரி என்ற இளைஞர், துணை ராணுவப் படையினர் ஒருவரை அரிவாளால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாடல் இயற்றியதாக பிரபல பாப் இசைப் பாடகரும், கிராமி விருது வென்ற ஈரான் பாடகருமான ஷெர்வின் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் பாடல் மாஷா அமினியின் உயிரிழப்பை தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.