மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு!
மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழ மத்தூர் திருச்சி - சென்னை
தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு
லாரி ஒன்று சென்றுள்ளது. அதன் பின்புறத்தில் திருச்சியிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து சென்னையை நோக்கி திருச்சி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. தொடர்ந்து, ஆம்னி பேருந்தின் பின்னால் வந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. சொகுசு பேருந்தில் பயணம் செய்த மேல்மருவத்தூரை அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், பிரவீன், சென்னை கொடுங்கையூர் சேர்ந்த தனலட்சுமி மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கிய 4 பேரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
பின்னர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த இருபதிற்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். படாளம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.