#Paralympics2024 ல் பதக்கங்களை வாங்கி குவித்த 3 தமிழச்சிகள் - யார் இவர்கள்?
பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வாங்கி குவித்து வரும் 3 தமிழச்சிகள் குறித்து விரிவாக காணலாம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் 21-17, 21-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும், 2ம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அதேபோல் தமிழ்நாட்டின் வீராங்கனையான மனிஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரனை நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலம் வென்றார்.
இதேபோல பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
யார் இந்த துளசிமதி முருகேசன்?
- துளசிமதி முருகேசன் ஏப்ரல் 11, 2002 அன்று தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பிறந்தார். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் ஐந்து வயதில் தடகளப் போட்டிகளில் பயிற்சி பெற்றார்.
- இதன் தொடர்ச்சியாக அடுத்த சில ஆண்டுகளில் பேட்மிண்டன் விளையாட்டின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.
- அவரது இடது கையில் ஒரு பிறவி குறைபாடு நாள்பட்ட தசைச் சிதைவு ஏற்பட்டது. இதன் பின்னர் நடந்த ஒரு விபத்தில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
- இருப்பினும், துளசிமதிக்கு விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை முருகேசன் அவருக்கு பயிற்சி அளிப்பதற்காக ஐந்து வருடங்கள் அர்பணித்தார். இதன் பின்னர் துளசிமதிக்கு பாரா-ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது
- ஒட்டாவாவில் நடந்த கனடா பாரா பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2023ல் துளசி இரட்டையர் SL3-SU5 பிரிவில் மானசி ஜோஷியுடன் இணைந்து, இந்தோனேசியாவின் தற்போதைய பாராலிம்பிக் சாம்பியன் மற்றும் உலகின் நம்பர் 1 அணியைத் தோற்கடித்து வரலாற்று வெற்றியைப் பெற்றார். இது துளசியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
- பாரிஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மனிஷா ராமதாஸ் யார்?
- மணிஷா ராமதாஸ் ஜனவரி 27ம் தேதி 2005ம் வருடத்தில் பிறந்தார். இவரது சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டமாகும்.
- மணிஷா தனது விளையாட்டுப் பயணத்தை 11 வயதில் இருந்து துவங்கினார். கையில் ஏற்பட்ட பிறவிக் குறைபாடு காரணமாக அவரால் விளையாட முடியாது என ஆரம்பத்தில் நினைத்துள்ளார்.
- 2019 இல் ஒரு நண்பரின் பரிந்துரையின் மூலம் பாரா பேட்மிண்டன் போட்டி அவருக்கு அறிமுகமாகிறது. அதன் பின்னர் அந்த விளையாட்டில் தீவிரமாக பயிற்சி பெற்ற அவர் ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் அறிமுகமானார்.
- அதேபோல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலால் ஈர்க்கப்பட்டு அவர் பாட்மிண்டன் விளையாட்டை தேர்வு செய்தார். பேட்மிண்டன் மட்டுமல்லாது கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸையும் ஆகியவையும் அவருக்கு பிடித்த விளையாட்டு ஆகும்.
- 2022 ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் அவரது திறமை மேலும் அங்கீகரிக்கப்பட்டு, அவரை உலக சாம்பியனாக உறுதிப்படுத்தியது.
- 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட பல பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.
- பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் 2024 போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
யார் இந்த நித்யஸ்ரீ சிவன் ?
- நித்யஸ்ரீ சிவன் ஓசூரில் பிறந்தவர். இவருக்கு ஆரம்பத்தில் கிரிக்கெட் மீதுதான் ஆர்வம் இருந்தது. தனது தந்தை மற்றும் சகோதரர் என இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் அதன்மீது ஆர்வம் ஏற்பட்டது.
- 2016 இல் ரியோ ஒலிம்பிக்கைப் கண்டுகளித்த போது பேட்மிண்டனில் தனது ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். மேலும் அப்போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனையான லின் டானின் ரசிகையானார்
- உள்ளூர் அகாடமியில் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினார், ஆரம்பத்தில் நிதி நெருக்கடி காரணமாக வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே கலந்து கொண்டார். இதன் பின்னர் அவருக்கு இருந்த தீவிர ஆர்வம் காரணமாக அவரை பயிற்சியாளர் தொழில்முறை பயிற்சிக்கு பரிந்துரைத்தார்.
- இந்தியாவின் தலைமை பயிற்சியாளரும் துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஸ்ரீ கௌரவ் கன்னாவில் கீழ் தொழில்முறை பயிற்சிக்காக அவர் லக்னோவுக்கு சென்றார்.
- பஹ்ரைனில் நடந்த ஆசிய யூத் பாரா கேம்ஸ் 2021 இல் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் 2022ல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல தங்கப் பதக்கங்கள் இவர் வென்றுள்ளார்.
- பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.