காட்டு மாடை வேட்டையாடிய 3 பேர் கைது -வனத்துறை அதிரடி!
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் காட்டு மாடை வேட்டையாடிய நபர்களை, வனத்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது வலசத்துறை. இப்பகுதியில்
நேற்று மாலை போடி சரக வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு இருந்த பொழுது எதிரே போடிநாயக்கனூர் ஊத்தாம் பாறை பகுதியிலிருந்து இரண்டு சாக்கு மூட்டைகளுடன் மூன்று நபர்கள் ஆட்டோவில் சந்தேகத்திற்கு இடமாக வந்தது
கண்டறிந்தனர்.
உடனடியாக அவர்களை விசாரிப்பதற்காக ஆட்டோவை நிறுத்த சொன்னபோது
அவர்கள் நிற்காமல் ஆட்டோவை அங்கிருந்து வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். இதனால்
மேலும் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் ஆட்டோவை துரத்திச் சென்று வலசைத்துறை ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் அருகே ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர்.
ஆட்டோவை ஆய்வு செய்த பொழுது இரண்டு சாக்கு பைகளிலும் சுமார் 50 கிலோ மதிப்புள்ள புதிதாக வெட்டப்பட்ட மாட்டு இறைச்சி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் காட்டு மாடு வேட்டையாடுவதற்கான வேல் கம்பு, அரிவாள் மற்றும் கத்தி போன்ற கூரிய
ஆயுதங்களும் வண்டியிலிருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூன்று நபர்களையும் கைது செய்து வனத்துறையினர் விசாரணை செய்த பொழுது போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊத்தாம்பாறை வனப்பகுதியில் உள்ள பூஞ்சோலை என்னும் பகுதியில் காட்டு மாட்டை வேட்டையாடியதாகவும், விற்பனைக்காகக் காட்டு மாட்டு இறைச்சியை ஊருக்குள் கொண்டு சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் மேலத்தெருவை சேர்ந்த பிரபாகரன்,
போடிநாயக்கனூர் புதூரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அதே பகுதியில் வளசத்துறை
ரோட்டில் குடியிருந்து வரும் அஜித் ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து
வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக காட்டுமாடு வேட்டையாடியதற்காக மூன்று நபர்களையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த சுமார் 50 கிலோ மதிப்புள்ள காட்டு மாட்டிறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் ஆட்டோ வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.