கார் மோதி விபத்து - சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பேர் உயிரிழப்பு!
திருச்சி அருகே தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அமைத்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஐவதுக்குடி கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் தொழுதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் அங்கு நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவம் இடத்திலேயே கார்த்திகேயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் காசி வேல் மற்றும் பாலமுருகன் என்ற இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அருகில் உள்ள பெரம்பலூர் மருத்துவமனை செல்லும் வழியில் பாலமுருகன் உயிரிழந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசிவேல் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.