நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகளுக்கு 3 மாத விடுப்பு! தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சிறை கைதிகளுக்கு தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்று 3 மாத விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீண்ட நாள் சிறையில் இருக்கும் சிறைக் கைதிகள் முன்கூட்டியே தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர்கள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதியரசர்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் நீண்ட காலம் சிறையில் இருக்கும் ஐந்து பேருக்கு (3 இஸ்லாமிய சிறை கைதிகள் மற்றும் இரண்டு இந்து சிறை கைதிகள்) தலா மூன்று மாதம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு காலத்தில் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் இருக்க முடியும் மாதம் ஒரு முறை வீடு அமைந்துள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
இதே போன்று மேலும் 12 பேருக்கும் 40 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளின் கோரிக்கை ஏற்று தமிழக அரசின் வாதத்திற்கு பிறகு நீதியரசர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், நீண்ட கால சிறைவாசிகளின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறியதில் அவர்கள் குடும்பத்தார் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.