திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!
நாமக்கல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. இந்த கடையின் அருகே வரிசையாக காலியான டேங்கர் லாரி, காட்டன் தூணி ஏற்றி வந்த லாரி, காலியான லாரி என 3 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென 3 லாரிகளும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததை பார்த்த அருகே உள்ளவர்கள் உடனே நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார்
தலைமையில் நாமக்கல் தீயணைப்பு நிலைய வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தண்ணீரை பீச்சியடித்து அணைத்தனர்.
இருப்பினும் தீயை அனைக்க முடியாததால் கூடுதலாக ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் இருந்து வாகனங்களைக் கொண்டு வந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை முழுவதும் அணைத்தனர். 3 லாரிகளும் முழுவதுமாக எரிந்ததில் ரூ. 90 லட்சம் மதிப்பிலான லாரியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த காட்டன் துணிகள் அனைத்தும் சேதமடைந்தன.
மேலும் லாரியில் உள்ள பேட்டரியில் மூலம் மின்சார கசிவு ஏற்பட்டு லாரி
தீப்பிடித்திருக்கலாம் என்ற கோணத்தில் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூபி.காமராஜ்