அடுத்தடுத்து 3படங்கள் கைவசம் - தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தும் ஜான்வி கபூர்!
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணைத் தொடர்ந்து அடுத்ததாக நானியின் 33வது படத்தில் ஜான்வி கபூர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அடுத்தடுத்து இவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது உலாஜ் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜங்கிளி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர் IFS அதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியில் வெளியான ’தடக்' என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமானவர் . இதனைத் தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் கோஸ்ட் ஸ்டேரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து கவனம் பெறத் தொடங்கினார்.
இந்த நிலையில் பாலிவுட்டிலிருந்து நேரடியாக தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார் ஜான்வி கபூர். தெலுங்கில் தற்போது ஜூனியர் என்டிஆருடன் தேவாரா எனும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் மற்றொரு பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானும் வில்லனாக நடிக்கிறார்.
இதேபோல கேம்சேஞ்சர் படத்திற்கு பிறகு ராம் சரண் நடிக்கும் 16வது படத்தின் அப்டேட் பூஜை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வெளியிடவில்லை. இப்படத்தின் பூஜையை தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரான நானியின் படத்தில் ஜான்வி கபூர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானியின் சூர்யாவின் சனிக்கிழமை படத்திற்கு பின்னர் அவரது 33-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்தை இயக்க உள்ளார். இதற்கு முன்னர் நானி நடித்த 'தசாரா' படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை
நானியின் 33-வது படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையானால் இது ஜான்வி கபூர் நடிக்கும் 3-வது தெலுங்கு படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.