For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய அணி உலகக்கோப்பைகளை முத்தமிட காரணமாக இருந்த 3 கேட்சுகள்... வரலாற்றின் சுவாரஸ்ய தருணங்கள்!

09:57 PM Jul 01, 2024 IST | Web Editor
இந்திய அணி உலகக்கோப்பைகளை முத்தமிட காரணமாக இருந்த 3 கேட்சுகள்    வரலாற்றின் சுவாரஸ்ய தருணங்கள்
Advertisement

இந்திய அணி உலகக்கோப்பைகளை முத்தமிட 3 முக்கிய கேட்சுகள் காரணமாக இருந்துள்ளன. வரலாற்றின் இந்த சுவாரஸ்ய தருணங்கள் குறித்து பார்க்கலாம்...

Advertisement

இந்தியாவின் 17 வருட உலகக் கோப்பை தாகத்தை டி20 உலக கோப்பையை கைப்பற்றியதன் மூலம் ரோகித் தலைமையிலான இந்திய படை தீர்த்து வைத்திருக்கிறது. சூர்யகுமார் யாதவ்வின் அபார கேட்ச் மூலம் டி-20 உலகக் கோப்பை இந்தியா வசமாகியிருக்கிறது. இந்த கேட்ச் மட்டுமல்ல இந்திய வீரர்கள் முக்கிய தருணங்களில் பிடித்த கேட்ச்கள் தான் 3 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்ல காரணமாய் அமைந்திருக்கிறது. அவை என்னென்ன? கேட்ச்களை பிடித்த வீரர்கள் யார் யார்? என்பது குறித்து சற்று முன்னோக்கிச் சென்று பார்க்கலாம்..

பல தசாப்தங்களாக கிரிக்கெட் விளையாடப்பட்டு வந்தாலும் ஆரம்ப காலகட்டங்களில் இந்தியா எப்போதுமே கத்துக்குட்டி அணி தான்.. தற்போதுள்ள அமெரிக்கா, கனடா போன்று மிகவும் ஏளனமாக பார்க்கப்பட்ட இந்திய அணி 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்தியாவை ஏளனம் செய்த அணிகள் எல்லாம் அப்போது மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்தது. டூர் போகிறார்கள் என கிண்டல் செய்தவர்கள் கோப்பையோடு வந்தவர்களை வரவேற்க மணிக்கணக்கில் காத்திருந்தார்கள்

அப்போதைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிளைவ் லாய்டு, விவியன் ரிச்சர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங் போன்ற ஜாம்பவான்கள் உலக அணிகளின் வீரர்களை கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தனர். இந்த தொடரில் தான் இந்திய அணி பல ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டு முதலில் பேட் செய்து வெறும் 183 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 184 என்ற இலக்கோடு இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியர்களின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டமிழக்கத் தொடங்கியது. ஆயினும் அந்த காலத்தில் மிகவும் மிரட்டலான பேட்ஸ்மேனாக கருதப்பட்ட விவியன் ரிச்சர்ச், களத்தில் இருந்தார். அவர் இருக்கும் வரை இந்தியாவுக்கு கோப்பை இல்லை என்ற நிலையே இருந்தது. அப்போதுதான் இந்தியாவின் பந்துவீச்சாளர் மதன்லால் வீசிய பந்தை ரிச்சர்ட்ஸ் ஓங்கி அடித்தார். மிட் விக்கேட் பகுதியில் நின்ற கபில்தேவ் அந்த பந்தை பின்னாலேயே ஓடிச் சென்று பிடித்தார். அந்த கேட்ச் தான் அந்த போட்டியின் திருப்பு முனை. வெறும் 140 ரன்களில் அசுர பலம் கொண்ட மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தப்பட்டு கோப்பை இந்தியா வசமானது. இந்த போட்டியில் இந்த கேச்சை 80'ஸ் கிட்ஸ் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள்.

1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியா எந்தவித ஐசிசி டிராபிகளையும் வெல்ல முடியாத நிலையே இருந்தது. உலகக்கோப்பையில் தொடர் தோல்வி அடைந்த நிலையில் டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் விலகிக் கொள்ள தோனி தலைமையிலான இளம் படை  2007-ஆம் ஆண்டு அந்தத் தொடருக்கு சென்றது. வழக்கம்போல தொடர் வெற்றிகளை சுவைத்த இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் களமிறங்கிய இந்தியா ஐந்து விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்தது. அந்த போட்டியில் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பாகிஸ்தான் விளையாடியது. 18 ஓவர்கள் 5 பந்துகள் நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் அபார பந்துவீச்சால் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 141 ரன்களை சேர்த்தது.

பின்னர் கடைசி 13 ரன்களை பெற 6 பந்துகள் மட்டுமே மீதமருந்தது. 1 விக்கெட்டை எடுத்து விட்டால் உலகக் கோப்பை கிடைத்துவிடும் இந்தியாவுக்கு. கடைசி ஓவரை ஹர்பஜன் சிங் வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கேப்டன் தோனி ஜோகிந்தர் சர்மாவுக்கு அந்த ஓவரை கொடுத்தார். அந்த ஓவரை பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரான மிஸ்பா உல் ஹக் சந்தித்தார். இரண்டாவது பந்தே சிக்ஸருக்கு பறந்தது. நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் இந்திய ரசிகர்கள். மூன்றாவது பந்தை ஜோகிந்திர் சர்மா ஃபுல் டாஸ் ஆக வீசினார். எளிதாக ஆட வேண்டிய அந்த பந்தை ஸ்கூப் ஷாட் அடித்தார் மிஸ்பா. ஏற்கனவே மிஸ்பாவின் வியூகத்தை கணித்திருந்த தோனி ஷார்ட் ஃபைன் லெக் பகுதியில் ஸ்ரீசாந்தை நிற்க வைத்தார். அவரும் அபாரமாக அந்த கேட்சை பிடிக்க உலகக்கோப்பை இந்தியா வசமானது. ஒருவேளை அந்த கேட்ச் பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்தியா முதல் டி20 உலக கோப்பையை வென்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

அடுத்ததாக தற்காலத்துக்கு வருவோம்.. 2024 டி-20 தொடர் முழுவதும் தோல்வியை சந்திக்காத அணிகளான இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் பார்படாசியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. போட்டியில் டாஸ் பெரிய அளவில் தாக்கம் செலுத்தாது என்பதால் பேட்டிங் தேர்வு செய்தார் ரோகித் சர்மா. முதலில் இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை நம் வசம் என்ற நம்பிக்கையோடு தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது.

அந்த அணியின் ஹென்றி கிளாஸன், மில்லர், குவின்டன் டி காக் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கிளாஸ்சனும் மில்லரும் இருக்கும் வரை இந்தியாவுக்கு கோப்பை இல்லை என்ற நிலை தான் இருந்தது. 15ஆவது ஓவர் வரை இந்திய வீரர்களை தென்ஆப்பிரிக்க வீரர்கள் துவட்டி எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் போதும்.. ஆரம்பத்தில் ஓவருக்கு 10 என்று இருந்த ரன் ரேட் கடைசி 5 ஓவர்களில் ஓவருக்கு ஆறு என சரிந்தது. அப்போதுதான் அந்த திருப்புமுனை ஏற்பட்டது. 16வது ஓவரை வீசிய பும்ரா நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அடுத்து 17வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா முதல் பந்திலயே ஹென்றி கிளாஸ்-ன் விக்கெட்டை எடுத்தார். பிறகு பும்ரா, அர்ஷதீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை மில்லர் விளாச சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் தான் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. டேவிட் மில்லர் இருந்திருந்தால் ஒரு வேளை தென்னாபிரிக்காவுக்கு கோப்பை சென்றிருக்கலாம். ஆனால் ஸ்ட்ரெய்ட் லைனுக்கு அருகே சிக்சர் லைனைத் தாண்டி விழச் சென்ற பந்தை எல்லைக் கோட்டருகே பிடித்த சூர்யகுமார் யாதவ். அதற்கு பிறகு பந்தை தூக்கி வீசிவிட்டு சிக்ஸ் லைனை தாண்டி சென்றார். பிறகு மீண்டும் மைதானத்திற்குள் வந்து பந்தை பிடித்து மில்லரை வெளியேற்றினார்.

கடந்த உலகக் கோப்பைகளில் எப்படி கபில்தேவ், ஸ்ரீசாந்த் கேட்ச்களைப் பிடித்து இந்தியாவுக்கு கோப்பைகளை பெற்றுக் கொடுத்தார்களோ அதே போல் தான் சூர்ய குமாரின் கேட்ச்சும் இரண்டாவது t20 உலக கோப்பையை வெல்ல உதவியது. இதன் மூலம் இந்தியாவின் மறக்க முடியாத கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் கபில்தேவ், ஸ்ரீசாந்துக்கு அடுத்து சூரியகுமார் யாதவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

Tags :
Advertisement