2வது டெஸ்ட் | முதல் இன்னிங்சில் இந்திய அணி 518 ரன்கள் குவிப்பு!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், சுப்மன் கில் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து, 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 175 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். பின்னர் நிதிஸ் ரெட்டி, கில் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இதில், நிதிஸ் ரெட்டி 43 ரன்களுடனும், பின்னர் வந்த துருவ் ஜுரேல் 44 ரன்களுடனும் வெளியேறினர். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. கில் 129 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.