திமுக - விசிக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை - தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!
திமுக - விசிக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.இதில் ராமநாதபுரம் தொகுதி ஐயுஎம்எல் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று தொகுதி பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : WPL 2024 : குஜராத்தை பந்தாடியது பெங்களூரு - புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு பொது தொகுதி, இரண்டு தனி தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கேட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாகவும், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தாகலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.