இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா ? ஷுப்மன் கில் பதில்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு முந்தைய நாள் பயிற்சியின்போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த ஆட்டத்தில் ஆட முடியவில்லை.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வசிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் 2-வது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில்லிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கில், "விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. எனவே நிச்சயமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கிறேன்" என கூறினார்.