2வது ஒருநாள் போட்டி | இந்திய அணியை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ரோகித் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிரடியாக ஆடிய இருவரும் சதம் விளாசினர். கெய்க்வாட் 105 ரன்களிலும், கோலி 102 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 66 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் யான்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
தென்னாப்பிரிக்க அணியின் குயிண்டன் டிகாக் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, ஏய்டன் மார்க்கரம் உடன் கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தார். இதில், பவுமா 46 ரன்களில் அவுட் ஆனார். எய்டம் மார்க்கரம் 110 ரன்களிலும், மேத்தீவ் பிரிட்ஸ்க்கி 68 ரன்களிலும் வெளியேறினர். மார்க்கோ ஜான்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 49.2 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் கார்பின் போஷ் 29 ரன்களிலும், கேசவ் மகாராஜ் 10 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.