மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் - தலைமை தேர்தல் ஆணையர் 2வது நாளாக இன்றும் ஆலோசனை!
சென்னையில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்துகிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பிற உயர் அதிகாரிகள் தலைமையில், 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.23) சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் நடைபெற்றது.மாநில மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்த தங்கள் கருத்துகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் அளித்தனர். அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், சரக காவல் துறைத் தலைவர்கள், மண்டல காவல் துறைத் துணை தலைவர்களுடன் மற்றொரு ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு மக்களவை தேர்தல் 2024-க்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் 2-வது நாளாக இன்றும் (பிப்.24) நடைபெறுகிறது. இன்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில காவல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடான கூட்டமும், மத்திய மற்றும் மாநில செயலாக்கத்துறை அலுவலர்களுடனான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்த கூட்டமும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தலைமைச் செலயாளர், காவல்துறைத் தலைவர், தேர்தல் பணியுடன் தொடர்புடைய அனைத்து துறை செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. பின்னர் மாலை 3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்புடன் தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகளுக்கான ஆய்வுக் கூட்டம் நிறைபெறவுள்ளது.