காதலர் தினத்தில் வெளியாகும் #2KLoveStory!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படம் காதலர் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’. 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அறிமுக நடிகர்கள், ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.
திட்டமிட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே 38 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில நாட்களுக்கு முன் இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.