மத்தியப் பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சர் மோகன் யாதவின் அமைச்சரவையில், 28 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் பதவிக்காலம் முடிந்து பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. தற்போது மோகன் யாதவ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் உள்ள லால் பரேடு மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாநிலத்தின் 19வது முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவியேற்றனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, 20 நாள்கள் கடந்தும் அம்மாநிலத்தில் அமைச்சரவை பொறுப்பேற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மோகன் யாதவ் அமைச்சரவையில் 28 பேர் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராதா சிங், பிரதிமா பாக்ரி, திலீப் அஹிர்வார், நரேந்திர சிவாஜி படேல் ஆகிய 4 பேர் இணை அமைச்சர்களாகவும், கிருஷ்ணா கவுர், தர்மேந்திர லோதி, திலீப் ஜெய்ஸ்வால், கௌதம் டெட்வால், லெகான் படேல், நாராயண் பவார் ஆகிய 6 பேர் (இன்டிபென்டன்ட் சார்ஜ்) அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.