திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளையொட்டி 2,700 சிறப்பு பேருந்துகள்- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நவம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இத்தீப திருவிழாவானது 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் நிறைவு நாளான 26 ஆம் தேதியன்று கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும்.
அண்ணாமலையார் ஆலய கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இதனை காண உலகெங்கிலும் இருந்து சுமார் 40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னேற்பாடாக திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், இத்தீபத்திருநாளையொட்டி, நவம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூர், புதுச்சேரியிலிருந்து இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.